புதன், 9 மார்ச், 2016

கார்கார்த்த வேளாளர் சங்க மாநாடு

பேருந்து சிதம்பரத்தை நெருங்க, நெருங்க கார்குல சொந்தங்களை வரவேற்கிறோம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் கண்ணில்பட்டது. பின் பெரிய பதாகைகளும் சாலையோரத்தில் வரவேற்றதும் தான் மாநாடுக்கு போகிறோம் என்ற நினைப்பு நிச்சயமானது.


இதுவரை சங்கம் தொடர்பான எந்த உள்ளூர் கூட்டங்களில் கூட கலந்து கொண்டதில்லை.  சங்கரன்கோவிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு கூட என் தந்தையார் மட்டுமே கலந்து கொண்டார்கள்.


மாநாட்டுக்கான அழைப்பிதழ் விருதுநகர் கார்காத்தார் சங்கத்தைச் சேர்ந்த திரு. நடராஜ பிள்ளை மூலம் கிடைத்தது.  இது விசயமாக நான் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.  பிழைப்புக்காக விருதுநகரிலிருந்து வேறு ஊருக்கு இடம் பெயர்ந்ததில் இருந்து, எல்லாத் தொடர்புகளுமே விட்டுப் போயிற்று.  இந்த அழைப்பிதழ் வந்ததும், கலந்து கொண்டால் என்ன?  என்ற கேள்வி வந்தது.  பணிகளுக்கிடையில், செல்ல முடியுமா? என்ற சந்தேகமும் இருந்ததால், இது குறித்து யாரிடமும் (விருதுநகரில்) நான் தகவல் எதுவும் கேட்கவில்லை.



தனியாக எப்படிப் போவது என்று, என்னுடன் உறவினர் ஒருவரையும் சேர்த்துக் கொண்டேன்.  கிளம்பி, சனிக்கிழமை மாலையில் சிதம்பரம் வந்தடைந்தோம்.  டீ சாப்பிட கடைப் பக்கம் ஒதுங்கிய போது சாலையோரம் கொடிகள் பறந்து கொண்டிருந்தது.  ஆங்காங்கே வரவேற்பு போஸ்டர்களும்.  ஏற்கனவே உடையார் தங்கும் விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்ததால், சிறிது ஓய்வு எடுத்தோம்.  இரவு உணவைத் தேடி சிதம்பரம் நகர்வலம்.

எங்கே போனாலும், நமக்குத் தான் இட்லியும், காரச்சட்னியும் வேணுமே. விசாரித்ததில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே பிள்ளையார் கோவில் பக்கத்தில் ஒரு கடையைச் சொன்னார்கள்.  எப்படித் தான் மூஞ்சியப் பார்த்து கண்டுபிடிக்கிறாங்களோ தெரியல.  கடைப் பெயர் “வேலுப்பிள்ளை கடை”.  

கல்லாவில் அமர்ந்திருந்தவர்,  செமினாருக்கு வந்தீங்களா? எனக்கேட்க

இல்லங்க மாநாடுக்கு வந்தோம்.

மாநாட்டுக்கு வந்தவங்களுக்கு மண்டபத்துலேயே டிபன் இருக்கே? மண்டபத்துக்கு போய் பேர் கொடுத்தீங்களா?

இல்லைங்க.  இன்னும் போகல.

எங்கே தங்கியிருக்கீங்க?

வாண்டையார்ல.

மாநாட்டுக்கு வெளியூர்லருந்து வர்றவங்களுக்கு, சிறப்பான முறையில தங்குறதுக்கும், உணவுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.

நீங்க ஏன் இங்கே வந்தீங்கன்ற மாதிரி அக்கறையோடு கேட்டார்.

அடடா! இந்த விசயம் நமக்குத் தெரியாமப் போச்சேனு, நினைச்சிக்கிட்டே மாநாடு நடக்கும் மண்டபத்தையாவது போய்ப் பார்த்துட்டு வரலாம்னு போனோம்.  ஒரு பெரிய அலங்கார நுழைவு வாயில் இருந்துச்சு. அது வரை போய் விட்டு காலைல வாண்டையார் மண்டபத்துக்குப் போய்க்கலாம்னு அறைக்கு வந்திட்டோம்.


ஞாயிறு (28.02.2016) காலையில ஊர்வலம் இந்த வழியாத் தானே போகும். அப்போ சேர்ந்துக்கலாம்னு அறையின் சாளரக் கண்ணாடி வழியாகப் பார்த்திட்டிருந்தோம்.  ம்ஹூம்! எதுவுமே இல்லை.  பின்னே விசாரிச்சப்போ தான், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கலைனு சொன்னாங்க.

காலைல வாண்டையார்ல சாப்பிட்டு விட்டு மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.  எதிரில் நடந்து வருபவர், இரு சக்கர வாகனங்களில் செல்பவர் அனைவரின் சட்டையிலும் மாநாட்டு பேட்ஜ் குத்தப்பட்டிருந்தது. போகும் நான்கு சக்கர மகிழுந்துகளில் எல்லாம் மாநாடு குறித்த பதாகை கட்டப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு போகும் போது, எதிர்ப்படும், கடக்கும் சரக்கு வண்டிகளில் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது கடக்கும் பத்து நபர்களில் ஒரு நபரின் சட்டையில் சங்கத்தின் சின்னத்தைப் பார்த்ததும் மகிழ்வு கூடியது.

நிகழ்விடத்தை நெருங்குகையில், நிறுத்தப்பட்டிருந்த வாகன எண்ணிக்கையைக் கண்டதும், கொஞ்சம் பெரிய அளவில் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, மண்டப வளாகத்தில் நுழையும் போதே, ஒரு நடிகரின் பதாகை தென்பட்டது.  அடடே! நடிகரும் நம் சங்கத்தில் இருக்கிறாரா? என்று பார்த்தால், பக்கத்திலேயே திரையரங்கம்.

ஒரு ஓரத்தில் கார்கார்த்தார் சங்கம், விருதுநகர் என்ற சிறிய நெகிழித் தாளைக் கண்டதும், நம்மாளுக வந்திருக்காங்க என்று உறுதியானது.  வருபவர்களை, வயது, வித்தியாசம் பார்க்காமல், இளைஞர்களும், மகளிரும், முதியவர்களும் இருகரம் கூப்பி வரவேற்றார்கள்.


மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விபரம் சேகரிக்கும் சீட்டு வழங்கப்பட்டது.  10 உரூபா பரிசுக் குலுக்கலின் போட்டிச் சீட்டும் கூட.  எல்லாவற்றையும் வாங்கியாகி விட்டது.  பரிசுச் சீட்டை என் உறவினரிடம் கொடுத்து, தொலைக்காட்சி பரிசு கிடைத்தால் ஊருக்கு அனுப்பிவிடச் சொல்லியிருந்தேன் (ஆமா, யாருக்கு பரிசு கிடைத்தது?  அது குறித்த விபரங்கள் முகநூலில் எங்குமே இல்லையே?).

அண்ணன் தம் மகனுக்கு, மணப்பெண் தேடலில் இருந்தார்கள்.  அதற்குரிய அரங்கில் மிகத் தெளிவாக பெண் வேணும் என்று சொன்னேன்.  பொண்ணு தேடுறீங்களா?  இந்தாங்க என்று சொல்லி மஞ்சள் நிற படிவத்தைக் கொடுத்தனர்.  படிவத்தை வாங்கி வேர்க்க, விறுவிறுக்க பூர்த்தி செய்து கொடுத்தேன்.  பின்னர், வெளியே வரும் போது கேட்டால், வெள்ளை நிறப்படிவம் தான் கொடுக்க வேண்டும் என மாற்றிச் சொன்னார்கள்.  பின் அதையும் பூர்த்தி செய்து கொடுத்தேன்.


ஒப்புரவு இதழுக்கு சந்தா கட்டும் அரங்கு (அங்கு கட்டமுடியவில்லை.  இப்போது எங்கு, எப்படி கட்டுவது எனத் தெரியவில்லை?), மருத்துவ அரங்கு, மாநாட்டு மலர் விற்பனை அரங்கு எல்லாவற்றையும் கடந்து, உள்ளே நுழையும் போது, விருதுநகரிலிருந்து யார் வந்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டி அலைபேசியில் அழைத்தேன்.  மாநாட்டு மேடைக்கு முன்னால் அமர்ந்து இருப்பதால், இப்போது எழுந்து வர இயலாது.  காத்திருக்கவும்.  பின்னர் சந்திக்கலாம் என்று சொன்னார்கள்.

சரி, ஒரு சுற்று சுற்றி வரலாம் என சென்றோம்.  சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பஞ்சு மிட்டாய், குடிநீர், நிலவேம்பு நீர் என்று மிகவும் சீரிய முறையில் விநியோகம் நடந்து கொண்டிருந்தது.


சிறிது காற்று வாங்க வேண்டி உட்புறம் சென்ற போது, சிலர் உணவு உட்கொண்டிருந்தார்கள்.  முன் தினம் நடந்த விவசாயக் கருத்தரங்கு வளாகத்தில் மின்விசிறிக்கு கீழே அமர்ந்திருந்தோம்.

மேடைக்கு முன்னே வந்து அமரும்படி எங்கள் சங்கத்தினரின் அழைப்பு.  உள்ளே போய் அமர்ந்தோம்.  அப்போது தான் மகளிர் அணியின் தலைவியார், மகளிர் அணிக்கு மொத்தமே ஒண்ணே கால் மணிநேரம் தான் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லி உரையாற்றிக் கொண்டே இருந்தார்கள்.


பின் சிறுமியின் பரதநாட்டியம் நடைபெற்றது.  நேரமாக ஆக வியர்வை மழையில் நனைந்து, கைக்குட்டையெல்லாம் ஈரமாகி, ‘இந்தா, வெளியே போய்ட்டு வந்திர்றோம்’ என்று சொல்லி அரங்கிலிருந்து வெளியேறினோம்.

உண்மையிலேயே இவ்வளவு கூட்டம், பிரம்மாண்டம், நேர்த்தியான, சிறப்பான ஏற்பாடுகள் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.  இம்மாநாட்டை ஏற்பாடு செய்த, உழைத்த, பெரும் வெற்றியாக்கிய ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பும், நன்றியும்.

வெளியே வரும் போது, நாம தனியாள் இல்லடா. நமக்குனு இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கு என்ற எண்ணத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்தோம்.