வியாழன், 28 ஏப்ரல், 2011

கொதச்சு கட்டுதல்

தும்னி கட்டுதல் அல்லது கொதச்சு கட்டுதல் அல்லது விளக்கிடு கல்யாணம்

கார்கார்த்தார் சமூகத்தில் பெண் குழந்தைகள் ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது வயதில் தை மாதம் முதல் தேதியன்று தாய்மாமனால் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சி.

எந்த வயதில் செய்கிறோமோ, அந்த வயதிற்கு ஏற்ப (5 வயது என்றால் 5 தங்கமணி) தங்கமணியும், பவளமணியும் (4 பவளமணி) வெள்ளிக் கம்பியில் கோர்த்து (ஒரு தங்கமணி அடுத்து பவள மணி அதற்கடுத்து தங்கமணி இப்படியாக) தாய்மாமன் மடியில் அமரவைத்து, பெண் குழந்தை கழுத்தில் அணிவிப்பார்கள்.


பவளம் என்பது சிவபெருமானின் அருள் வடிவைக் குறிக்கும். தங்கமணிகள் ஒன்பதும் நவசக்தி நாயகியாகிய பராசக்தியின் அருள் வடிவம். கைவிளக்கு சக்தியின் வடிவாகும். அகல் விளக்கு சிவனின் வடிவாகும்.


சிவ சக்தி வடிவமான நவதாலிஅம்மையும் அப்பனுமாக இருந்து அப்பெண் பெரியவள் ஆகி திருமணம் ஆகும் வரை கற்புக்குக் காவலாக மற்ற எவ்வித தீங்கும் ஏற்படாமல் பாதுகாத்து அவளை குலமகளாக விளங்கச் செய்து என்றென்றும் காக்கும் என்பது ஐதீகம். 

தாய்மாமன் சீர்வரிசை :

  •  பட்டுப்பாவாடை, பட்டுச் சட்டை, தாவணி, வெங்கலப் பானை, வெங்கலக் கரண்டி, பெரிய அகல் விளக்கு, துணை விளக்கு (தைப்பொங்கல் விளக்கு), பித்தளை தாம்பாளம், பச்சரிசி, பாசிப் பருப்பு, நெய், திரி, மொய் பணம் (100ன் மடங்கு + 1 ரூபாய் சேர்த்து - 101, 501, 1001 இப்படியாக) மண்ட வெல்லம், ஏலக்காய், முந்திரிப் பருப்பு, தட்டில் வைக்க – 3 தேங்காய், வாழைப்பழம் (எண்ணிக்கையில் ஒற்றைப்படை – 5, 7, 9), வெற்றிலை, பாக்கு, மாலை, துணை மாலை, தலைக்கு சூடும் பூ, காய்கறி, கரும்பு வகைக்கு பணம்.

  • கைவிளக்கு சக்தியின் வடிவாகும். அகல் விளக்கு சிவனின் வடிவாகும். வீட்டில் உள்ள அஞ்ஞானம், பேதைமை, வறுமை, நோய் மன சஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி நல்வழி காட்டியருள வேண்டி இந்த விளக்குகள் ஏற்றப்படுகின்றன. 

  • பொங்கலன்று காலை பெண் குழந்தை வயதிற்கு ஏற்ப (5 அல்லது 7), பானைகளில் பொங்கல் வைத்து விளக்கு முன் வைக்க வேண்டும்.  ஒரு பானை சர்க்கரைப் பொங்கல் மீதி ஒரு பானை வெண்பொங்கல்.  ஒரு பானை பொங்கல் குழந்தை தானே வைக்க வேண்டும்.

  •  தாய்மாமன் சீர் வரிசை விளக்கை முன்னே வைக்க வேண்டும்.  நிறை நாழி, நெல், சாணத்தில் செய்த பிள்ளையார், விளக்கு முன் வைக்க வேண்டும்.

  • குழந்தை தாய்மாமன் தந்த புத்தாடையை அணிந்து, தேங்காய் உடைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

  • தாம்பாளத்தில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் விளக்கு வைத்து ஏற்ற வேண்டும்.  தாம்பாளத்துடன் ஆரத்தி எடுக்க வேண்டும்.  சின்ன மணமேடை அமைத்து தென்னை ஓலை, பாக்கு, வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.  மணமேடையில் தாய் மாமனும் புத்தாடை அணிந்து அமர வேண்டும்.  மங்கள வாத்தியம் முழங்க குழந்தையில் அம்மாச்சி குழந்தையை அழைத்து வந்து தாய்மாமன் மடியில் அமர வைக்க வேண்டும்.  தாத்தா போன்ற வயதில் மூத்தோர் கொதச்சு மணியை எடுத்து தாய்மாமன் கையில் கொடுக்க வேண்டும்.

  • தாய்மாமன் கொதச்சு மணியை குழந்தையின் கழுத்தில் அணிவிக்க வேண்டும்.

  • பெரியவர்கள் ஆசீர்வதிக்க வேண்டும்.

  • விருந்து பரிமாற வேண்டும்.

நவதாலியை திருமணம் நடைபெறும் நாள் வரை ஒரு பெண் அணிந்திருந்து கணவனால் திருமாங்கல்யம் பூட்டப்பட்ட பின் நவதாலியில் இருந்து பவள மணி மூன்றையும் தங்கமணி இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கோர்த்து திருமாங்கல்யத்தோடு கட்டுவது வழக்கம்.

கணவனது உயிரையும், உடைமைகளையும், குடும்பத்தையும் என்றும் என்னுடன் உடனிருக்க அருள் புரிய வேண்டும்என்று கட்டி விட வேண்டும். இதனை ‘கொதச்சுப் பிரித்துக் கட்டுதல்என்பர்.
 



முன்பு, முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்களை அரண்மனைக்கு கவர்ந்து செல்லும் வழக்கமிருந்தது.  ஆனால், தாலி கட்டிய பெண்களைத் தொட மாட்டார்கள்.  அவர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பதற்காகவே இந்த நவதாலி அணியும் வழக்கம் வந்தது என்பது செவி வழிச் செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக