புதன், 9 மார்ச், 2016

கார்கார்த்த வேளாளர் சங்க மாநாடு

பேருந்து சிதம்பரத்தை நெருங்க, நெருங்க கார்குல சொந்தங்களை வரவேற்கிறோம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் கண்ணில்பட்டது. பின் பெரிய பதாகைகளும் சாலையோரத்தில் வரவேற்றதும் தான் மாநாடுக்கு போகிறோம் என்ற நினைப்பு நிச்சயமானது.


இதுவரை சங்கம் தொடர்பான எந்த உள்ளூர் கூட்டங்களில் கூட கலந்து கொண்டதில்லை.  சங்கரன்கோவிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு கூட என் தந்தையார் மட்டுமே கலந்து கொண்டார்கள்.


மாநாட்டுக்கான அழைப்பிதழ் விருதுநகர் கார்காத்தார் சங்கத்தைச் சேர்ந்த திரு. நடராஜ பிள்ளை மூலம் கிடைத்தது.  இது விசயமாக நான் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.  பிழைப்புக்காக விருதுநகரிலிருந்து வேறு ஊருக்கு இடம் பெயர்ந்ததில் இருந்து, எல்லாத் தொடர்புகளுமே விட்டுப் போயிற்று.  இந்த அழைப்பிதழ் வந்ததும், கலந்து கொண்டால் என்ன?  என்ற கேள்வி வந்தது.  பணிகளுக்கிடையில், செல்ல முடியுமா? என்ற சந்தேகமும் இருந்ததால், இது குறித்து யாரிடமும் (விருதுநகரில்) நான் தகவல் எதுவும் கேட்கவில்லை.தனியாக எப்படிப் போவது என்று, என்னுடன் உறவினர் ஒருவரையும் சேர்த்துக் கொண்டேன்.  கிளம்பி, சனிக்கிழமை மாலையில் சிதம்பரம் வந்தடைந்தோம்.  டீ சாப்பிட கடைப் பக்கம் ஒதுங்கிய போது சாலையோரம் கொடிகள் பறந்து கொண்டிருந்தது.  ஆங்காங்கே வரவேற்பு போஸ்டர்களும்.  ஏற்கனவே உடையார் தங்கும் விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்ததால், சிறிது ஓய்வு எடுத்தோம்.  இரவு உணவைத் தேடி சிதம்பரம் நகர்வலம்.

எங்கே போனாலும், நமக்குத் தான் இட்லியும், காரச்சட்னியும் வேணுமே. விசாரித்ததில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே பிள்ளையார் கோவில் பக்கத்தில் ஒரு கடையைச் சொன்னார்கள்.  எப்படித் தான் மூஞ்சியப் பார்த்து கண்டுபிடிக்கிறாங்களோ தெரியல.  கடைப் பெயர் “வேலுப்பிள்ளை கடை”.  

கல்லாவில் அமர்ந்திருந்தவர்,  செமினாருக்கு வந்தீங்களா? எனக்கேட்க

இல்லங்க மாநாடுக்கு வந்தோம்.

மாநாட்டுக்கு வந்தவங்களுக்கு மண்டபத்துலேயே டிபன் இருக்கே? மண்டபத்துக்கு போய் பேர் கொடுத்தீங்களா?

இல்லைங்க.  இன்னும் போகல.

எங்கே தங்கியிருக்கீங்க?

வாண்டையார்ல.

மாநாட்டுக்கு வெளியூர்லருந்து வர்றவங்களுக்கு, சிறப்பான முறையில தங்குறதுக்கும், உணவுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.

நீங்க ஏன் இங்கே வந்தீங்கன்ற மாதிரி அக்கறையோடு கேட்டார்.

அடடா! இந்த விசயம் நமக்குத் தெரியாமப் போச்சேனு, நினைச்சிக்கிட்டே மாநாடு நடக்கும் மண்டபத்தையாவது போய்ப் பார்த்துட்டு வரலாம்னு போனோம்.  ஒரு பெரிய அலங்கார நுழைவு வாயில் இருந்துச்சு. அது வரை போய் விட்டு காலைல வாண்டையார் மண்டபத்துக்குப் போய்க்கலாம்னு அறைக்கு வந்திட்டோம்.


ஞாயிறு (28.02.2016) காலையில ஊர்வலம் இந்த வழியாத் தானே போகும். அப்போ சேர்ந்துக்கலாம்னு அறையின் சாளரக் கண்ணாடி வழியாகப் பார்த்திட்டிருந்தோம்.  ம்ஹூம்! எதுவுமே இல்லை.  பின்னே விசாரிச்சப்போ தான், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கலைனு சொன்னாங்க.

காலைல வாண்டையார்ல சாப்பிட்டு விட்டு மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.  எதிரில் நடந்து வருபவர், இரு சக்கர வாகனங்களில் செல்பவர் அனைவரின் சட்டையிலும் மாநாட்டு பேட்ஜ் குத்தப்பட்டிருந்தது. போகும் நான்கு சக்கர மகிழுந்துகளில் எல்லாம் மாநாடு குறித்த பதாகை கட்டப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு போகும் போது, எதிர்ப்படும், கடக்கும் சரக்கு வண்டிகளில் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது கடக்கும் பத்து நபர்களில் ஒரு நபரின் சட்டையில் சங்கத்தின் சின்னத்தைப் பார்த்ததும் மகிழ்வு கூடியது.

நிகழ்விடத்தை நெருங்குகையில், நிறுத்தப்பட்டிருந்த வாகன எண்ணிக்கையைக் கண்டதும், கொஞ்சம் பெரிய அளவில் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, மண்டப வளாகத்தில் நுழையும் போதே, ஒரு நடிகரின் பதாகை தென்பட்டது.  அடடே! நடிகரும் நம் சங்கத்தில் இருக்கிறாரா? என்று பார்த்தால், பக்கத்திலேயே திரையரங்கம்.

ஒரு ஓரத்தில் கார்கார்த்தார் சங்கம், விருதுநகர் என்ற சிறிய நெகிழித் தாளைக் கண்டதும், நம்மாளுக வந்திருக்காங்க என்று உறுதியானது.  வருபவர்களை, வயது, வித்தியாசம் பார்க்காமல், இளைஞர்களும், மகளிரும், முதியவர்களும் இருகரம் கூப்பி வரவேற்றார்கள்.


மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விபரம் சேகரிக்கும் சீட்டு வழங்கப்பட்டது.  10 உரூபா பரிசுக் குலுக்கலின் போட்டிச் சீட்டும் கூட.  எல்லாவற்றையும் வாங்கியாகி விட்டது.  பரிசுச் சீட்டை என் உறவினரிடம் கொடுத்து, தொலைக்காட்சி பரிசு கிடைத்தால் ஊருக்கு அனுப்பிவிடச் சொல்லியிருந்தேன் (ஆமா, யாருக்கு பரிசு கிடைத்தது?  அது குறித்த விபரங்கள் முகநூலில் எங்குமே இல்லையே?).

அண்ணன் தம் மகனுக்கு, மணப்பெண் தேடலில் இருந்தார்கள்.  அதற்குரிய அரங்கில் மிகத் தெளிவாக பெண் வேணும் என்று சொன்னேன்.  பொண்ணு தேடுறீங்களா?  இந்தாங்க என்று சொல்லி மஞ்சள் நிற படிவத்தைக் கொடுத்தனர்.  படிவத்தை வாங்கி வேர்க்க, விறுவிறுக்க பூர்த்தி செய்து கொடுத்தேன்.  பின்னர், வெளியே வரும் போது கேட்டால், வெள்ளை நிறப்படிவம் தான் கொடுக்க வேண்டும் என மாற்றிச் சொன்னார்கள்.  பின் அதையும் பூர்த்தி செய்து கொடுத்தேன்.


ஒப்புரவு இதழுக்கு சந்தா கட்டும் அரங்கு (அங்கு கட்டமுடியவில்லை.  இப்போது எங்கு, எப்படி கட்டுவது எனத் தெரியவில்லை?), மருத்துவ அரங்கு, மாநாட்டு மலர் விற்பனை அரங்கு எல்லாவற்றையும் கடந்து, உள்ளே நுழையும் போது, விருதுநகரிலிருந்து யார் வந்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டி அலைபேசியில் அழைத்தேன்.  மாநாட்டு மேடைக்கு முன்னால் அமர்ந்து இருப்பதால், இப்போது எழுந்து வர இயலாது.  காத்திருக்கவும்.  பின்னர் சந்திக்கலாம் என்று சொன்னார்கள்.

சரி, ஒரு சுற்று சுற்றி வரலாம் என சென்றோம்.  சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பஞ்சு மிட்டாய், குடிநீர், நிலவேம்பு நீர் என்று மிகவும் சீரிய முறையில் விநியோகம் நடந்து கொண்டிருந்தது.


சிறிது காற்று வாங்க வேண்டி உட்புறம் சென்ற போது, சிலர் உணவு உட்கொண்டிருந்தார்கள்.  முன் தினம் நடந்த விவசாயக் கருத்தரங்கு வளாகத்தில் மின்விசிறிக்கு கீழே அமர்ந்திருந்தோம்.

மேடைக்கு முன்னே வந்து அமரும்படி எங்கள் சங்கத்தினரின் அழைப்பு.  உள்ளே போய் அமர்ந்தோம்.  அப்போது தான் மகளிர் அணியின் தலைவியார், மகளிர் அணிக்கு மொத்தமே ஒண்ணே கால் மணிநேரம் தான் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லி உரையாற்றிக் கொண்டே இருந்தார்கள்.


பின் சிறுமியின் பரதநாட்டியம் நடைபெற்றது.  நேரமாக ஆக வியர்வை மழையில் நனைந்து, கைக்குட்டையெல்லாம் ஈரமாகி, ‘இந்தா, வெளியே போய்ட்டு வந்திர்றோம்’ என்று சொல்லி அரங்கிலிருந்து வெளியேறினோம்.

உண்மையிலேயே இவ்வளவு கூட்டம், பிரம்மாண்டம், நேர்த்தியான, சிறப்பான ஏற்பாடுகள் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.  இம்மாநாட்டை ஏற்பாடு செய்த, உழைத்த, பெரும் வெற்றியாக்கிய ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பும், நன்றியும்.

வெளியே வரும் போது, நாம தனியாள் இல்லடா. நமக்குனு இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கு என்ற எண்ணத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்தோம்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

நகரத்தாரும், கார்காத்தாரும்


நாட்டுக்கோட்டை நகரத்தார் குலப் பெண்கள், அதாவது செட்டிநாட்டு ஆச்சிகள் அனைவருமே, கார்கார்த்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் என டாக்டர். திரு. ஏ.சி. முத்தையா செட்டியார் அவர்களின் மனைவி திருமதி. தேவகி முத்தையா, எழுதிய நகரத்தார் வரலாறு குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


கட்டுரை - http://www.devakimuthiah.com/arulkoornthu.html

மேலும், கட்டுரையில்,

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் குலத்துப் பெண்கள் யாருமே உயிரோடு இல்லாத நிலையில் இருந்தனர்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் ரத்ன மகுட வைசியர் என்பதால், மன்னனின் முடிசூட்டு விழாவை அவர்கள் தான் நடத்தி வைக்க வேண்டும்.  முடி சூட்டுவதற்குத் திருமணமானவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதால், உயிர் பிழைத்த ஒன்பது நகரத்து வாலிபர்களுக்கும், ஒன்பது கார்காத்த வேளாளர் குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்கள்.

எங்கள் நகரத்தார் குலத்துப் பெண்கள் அனைவருமே கார்காத்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் ஆவர்.  இதை நிலைநாட்டுவதற்கென்றே, எங்கள் குலத்துப் பெண்கள் அனைவருக்கும் வேளாளர் குல மடமாகிய, துலாவூர் திருமடத்தின் ஆதீனம் தான் உபதேசம் செய்து வைப்பார்கள்.

நான் மட்டுமல்ல, எங்கள் குலத்துப் பெண்கள் அனைவருமே கார்காத்த வேளாளர் குலத்து மகள்களே என திருமதி. தேவகி முத்தையா குறிப்பிடுகிறார்.

சனி, 31 டிசம்பர், 2011

ஊர் வரலாறு

விருதுநகர் 9. 34’ 10” நிலநேர்கோடு (Longitude) மற்றும் 77.57’25” நிலகுறுக்கு கோட்டிலும் (Latitude ) அமைந்துள்ளது.
விருதுநகரைச் சுற்றி வடக்கில் மதுரையும் (48கி.மீ) தெற்கில் சாத்தூர் (26கி.மீ) மேற்கில் சிவகாசி (26கி.மீ) மேலும் அருப்புக்கோட்டையும்(18கி.மீ) அமைந்துள்ளது.
கடல் மட்டத்திற்கு மேல் 101 மீட்டர் உயரம், சமவெளி பிரதேசம், கரிசல்மண், கருங்கல் மற்றும் சுக்கான் பாறைகள் கொண்ட புவியல் அமைப்பைக் கொண்டது. வெப்பம் மிகுந்த மற்றும் நிலையற்ற மழைத்தன்மையைக் கொண்ட இடமாகும்.
திருத்தங்கலில் கண்டெடுக்கப்பட்ட மீன் பொரித்த நாணயம் பாண்டிய மன்னர்களின் ஆட்சியைக் குறிக்கிறது.  பாண்டிய மன்னர்கள் ஏறத்தாழ 16ஆம் நூற்றாண்டு வரை ஆண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது புங்க நாடு என்று அழைக்கப்பட்டது.
இடையில் சிறிது காலம் சோழர்களின் கீழ் மதுராந்தக நாடாகவும் (கி.பி.985-கி.பி.1205) கூறப்படுகிறது.
பிற்கால பாண்டியர் ஆட்சியின் போது செங்குடி நாடாக அழைக்கப்பட்டது. (கி.பி.1266- 1345)
நாயக்கர் ஆட்சியின் கீழ் சிறிது காலம் இருந்துள்ளது. எரிச்சநத்தம் - விருதுநகர் சாலை, மங்கம்மாள் சாலை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
கயிறு திரிக்கும் சலுப்பர்கள் இருந்தமையால் சலுப்பப்பட்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
வடக்கே இருந்து வந்த வீரனோடு போரிட்டு, வெற்றி பெற்றமையால் அவன் விருதுகள் யாவும் இங்குள்ள வீரன் பெற்றமையால், “ விருதுபட்டி” விருது-விருதுகள்பட்டி-சிறிய கிராமம், விருதுபட்டி என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமங்கலம் ஸ்ரீ பெரியகாத்தவராயன் மற்றும் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கல்வெட்டில் விருதுவெற்றி என்றும் கூறப்படுகிறது.
கந்தசாமி கவிராயர் தம் “தெப்பக்குளச்சிந்து” வில் “விருதூர்” மற்றும்“விருதையூர்” எனவும் குறிப்பிடலாம்.
விருதுகெட்டி, விருதுவெட்டி, பரிசுபட்டி, விருதை, விருதையம்பதி, வெயிலுவந்தாள் பட்டிணம் என்றும் கூறப்படுகிறது.
6-4-1923 முதல் “விருதுநகர்” என்று அழைக்கப்படுகிறது.
விருதுநகர் என்றால் வணிகம் என்று சொல்லும் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது.
"Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்பும் உண்டு.
தகவல் மற்றும் படங்கள் உதவி - MYVNR

செவ்வாய், 5 ஜூலை, 2011

விளக்கிடு திருமண அழைப்பிதழ்

1940ம் வருடம் அச்சிடப்பட்ட அழைப்பிதழ்


 2011ம் வருடம் அச்சிடப்பட்ட அழைப்பிதழ்


திங்கள், 16 மே, 2011

வியாழன், 28 ஏப்ரல், 2011

கொதச்சு கட்டுதல்

தும்னி கட்டுதல் அல்லது கொதச்சு கட்டுதல் அல்லது விளக்கிடு கல்யாணம்

கார்கார்த்தார் சமூகத்தில் பெண் குழந்தைகள் ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது வயதில் தை மாதம் முதல் தேதியன்று தாய்மாமனால் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சி.

எந்த வயதில் செய்கிறோமோ, அந்த வயதிற்கு ஏற்ப (5 வயது என்றால் 5 தங்கமணி) தங்கமணியும், பவளமணியும் (4 பவளமணி) வெள்ளிக் கம்பியில் கோர்த்து (ஒரு தங்கமணி அடுத்து பவள மணி அதற்கடுத்து தங்கமணி இப்படியாக) தாய்மாமன் மடியில் அமரவைத்து, பெண் குழந்தை கழுத்தில் அணிவிப்பார்கள்.


பவளம் என்பது சிவபெருமானின் அருள் வடிவைக் குறிக்கும். தங்கமணிகள் ஒன்பதும் நவசக்தி நாயகியாகிய பராசக்தியின் அருள் வடிவம். கைவிளக்கு சக்தியின் வடிவாகும். அகல் விளக்கு சிவனின் வடிவாகும்.


சிவ சக்தி வடிவமான நவதாலிஅம்மையும் அப்பனுமாக இருந்து அப்பெண் பெரியவள் ஆகி திருமணம் ஆகும் வரை கற்புக்குக் காவலாக மற்ற எவ்வித தீங்கும் ஏற்படாமல் பாதுகாத்து அவளை குலமகளாக விளங்கச் செய்து என்றென்றும் காக்கும் என்பது ஐதீகம். 

தாய்மாமன் சீர்வரிசை :

  •  பட்டுப்பாவாடை, பட்டுச் சட்டை, தாவணி, வெங்கலப் பானை, வெங்கலக் கரண்டி, பெரிய அகல் விளக்கு, துணை விளக்கு (தைப்பொங்கல் விளக்கு), பித்தளை தாம்பாளம், பச்சரிசி, பாசிப் பருப்பு, நெய், திரி, மொய் பணம் (100ன் மடங்கு + 1 ரூபாய் சேர்த்து - 101, 501, 1001 இப்படியாக) மண்ட வெல்லம், ஏலக்காய், முந்திரிப் பருப்பு, தட்டில் வைக்க – 3 தேங்காய், வாழைப்பழம் (எண்ணிக்கையில் ஒற்றைப்படை – 5, 7, 9), வெற்றிலை, பாக்கு, மாலை, துணை மாலை, தலைக்கு சூடும் பூ, காய்கறி, கரும்பு வகைக்கு பணம்.

  • கைவிளக்கு சக்தியின் வடிவாகும். அகல் விளக்கு சிவனின் வடிவாகும். வீட்டில் உள்ள அஞ்ஞானம், பேதைமை, வறுமை, நோய் மன சஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி நல்வழி காட்டியருள வேண்டி இந்த விளக்குகள் ஏற்றப்படுகின்றன. 

  • பொங்கலன்று காலை பெண் குழந்தை வயதிற்கு ஏற்ப (5 அல்லது 7), பானைகளில் பொங்கல் வைத்து விளக்கு முன் வைக்க வேண்டும்.  ஒரு பானை சர்க்கரைப் பொங்கல் மீதி ஒரு பானை வெண்பொங்கல்.  ஒரு பானை பொங்கல் குழந்தை தானே வைக்க வேண்டும்.

  •  தாய்மாமன் சீர் வரிசை விளக்கை முன்னே வைக்க வேண்டும்.  நிறை நாழி, நெல், சாணத்தில் செய்த பிள்ளையார், விளக்கு முன் வைக்க வேண்டும்.

  • குழந்தை தாய்மாமன் தந்த புத்தாடையை அணிந்து, தேங்காய் உடைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

  • தாம்பாளத்தில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் விளக்கு வைத்து ஏற்ற வேண்டும்.  தாம்பாளத்துடன் ஆரத்தி எடுக்க வேண்டும்.  சின்ன மணமேடை அமைத்து தென்னை ஓலை, பாக்கு, வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.  மணமேடையில் தாய் மாமனும் புத்தாடை அணிந்து அமர வேண்டும்.  மங்கள வாத்தியம் முழங்க குழந்தையில் அம்மாச்சி குழந்தையை அழைத்து வந்து தாய்மாமன் மடியில் அமர வைக்க வேண்டும்.  தாத்தா போன்ற வயதில் மூத்தோர் கொதச்சு மணியை எடுத்து தாய்மாமன் கையில் கொடுக்க வேண்டும்.

  • தாய்மாமன் கொதச்சு மணியை குழந்தையின் கழுத்தில் அணிவிக்க வேண்டும்.

  • பெரியவர்கள் ஆசீர்வதிக்க வேண்டும்.

  • விருந்து பரிமாற வேண்டும்.

நவதாலியை திருமணம் நடைபெறும் நாள் வரை ஒரு பெண் அணிந்திருந்து கணவனால் திருமாங்கல்யம் பூட்டப்பட்ட பின் நவதாலியில் இருந்து பவள மணி மூன்றையும் தங்கமணி இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கோர்த்து திருமாங்கல்யத்தோடு கட்டுவது வழக்கம்.

கணவனது உயிரையும், உடைமைகளையும், குடும்பத்தையும் என்றும் என்னுடன் உடனிருக்க அருள் புரிய வேண்டும்என்று கட்டி விட வேண்டும். இதனை ‘கொதச்சுப் பிரித்துக் கட்டுதல்என்பர்.
 முன்பு, முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்களை அரண்மனைக்கு கவர்ந்து செல்லும் வழக்கமிருந்தது.  ஆனால், தாலி கட்டிய பெண்களைத் தொட மாட்டார்கள்.  அவர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பதற்காகவே இந்த நவதாலி அணியும் வழக்கம் வந்தது என்பது செவி வழிச் செய்தி.

விளக்கிடு கல்யாணம்


விளக்கிடு கல்யாணம் ஓர் சிறிய விளக்கம்

விளக்கிடு கல்யாணம் என்பது கார்காத்த வேளாளர் மரபில் 5 வயது கன்னிப் பெண்னிற்கு சிவசக்தி வடிவமான நவதாலியை தாய் வழிப் பாட்டனார் (தாய் மாமனார்) தைப் பொங்கல் முதல் நாளில் சூரிய பகவான் முன்பு கழுத்தில் அணிவிக்கப்படுகிறது.  நவதாலியின் அமைப்பானது சிவபெருமானின் அம்சமான பவழமணி பத்தும், நவசக்தியின் அம்சமான தங்க உருண்டைகள் ஒன்பதும் ஆக மொத்தம் 19 உருண்டைகள் சேர்த்து கோர்த்திருக்கும்.  9 நாயகிகளுக்கு 9 நாயகர்களும், 10வது பவளம் பிரதானமான ருத்திர மூர்த்தியான சிவபெருமானைக் குறிக்கும்.  19 மணிகளும் சிவசக்தி அருள் வடிவமாகும்.  5 வயது பெண் வளர்ந்து பெரியவள் ஆகி திருமண வயது வந்த காலத்தில் கணவனால் திருமாங்கல்யம் பூட்டும் வரை பெண்ணின் கற்புக்கு காவலாக, பாதுகாத்து, மந்திர தந்திரங்களாலோ (அ) வேறு தீயசெயல்களினாலோ தீங்கு ஏற்படாமல் பாதுகாத்து குலமகளாக விளங்க அம்மையும், அப்பனும் பெண்ணிற்கு அருள் கொடுத்து என்றும் காப்பார்கள் என்பது ஐதீகம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி.  5 வயது சிறுமியான பெண்ணிற்கு நல்லொழுக்கம், நற்பண்புகள், கல்வி, அறிவு, பொறுமை, தியாக உள்ளம், அன்பு நிறைந்த மனம், அடக்கம், தெய்வ வழிபாடு, பெரியோர்களை மதிக்கும் பாங்கு இவை யாவும் அமைய வேண்டும்.  அதை சிறுவயதிலேயே கடைபிடித்து வளர்ந்து வருவாளானால் இல்லத்துக்கு அரசியாக குடும்பத்தில் விளக்காக ஒளி வீசி என்றும் பிரகாசிக்க முடியும் என்பதற்காக விளக்கு பூஜையும் செய்வது என்பது வழக்கு.

அகல் விளக்கு சிவனின் வடிவமாகும்.  கைவிளக்கு சக்தி வடிவமாகும்.  108 இழைகள் எடுத்து அதை மூன்று பாகமாக பிரித்து ஜடை போலப் பின்னிப் போட்டு ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.  வீட்டிலுள்ள அஞ்ஞானம், பேதமை, வறுமை, நோய், மனசஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி அம்மையே எனக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று வழிபடவேண்டும்.  பெண் ஆனவள் கணவனுடன் இணைந்து சிவசக்தியின் அம்சமாக ஒவ்வொரு இல்லத்திலும் விளங்க வேண்டும்.  வாழ்வுக்கு அரசியாக வாழ வேண்டும்.  எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் மங்கையர்க்கு அரசியாக எம்பெருமான் அருளால் என்றென்றும் வாழ்வார்கள் என விளக்கிடு கல்யாணத்தின் பெருமை குறிப்பதாக வரலாறு.

கார்கார்த்த வேளாளர் பற்றிய ஒரு சிறு குறிப்பு

பழம்பெரும் தமிழ்க்குலமான கார்காத்தார் என்றும், காராளர் என்றும், காரைக்காட்டார் என்றும் வழங்கப்படும் கார்காத்த வேளாளரின் வரலாறு பாரம்பரியம் மிக்கது.

இவ்வின மக்கள் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, தென்னார்க்காடு, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பரவி வாழ்கின்றனர்.

கார்காத்த வேளாளர் “உழுவித்துண்போர்” “உழுதுண்போர்” என இருவகைப்படுவர்.  இவர்கள் “வேள்” என்றும் “அரசு” எனவும் உரிமை பெற்றனர்.  இவர்கள் தொழில் உழுது பயிரிடுதல்.  வேளாளர் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவர் என்னும் பொருளுடையது என்பர்.  துலாபாரதானத்தில் அரசர்களை நிறுக்கும் தொழில் இவர்களுடையது என மனுவும், அரசர்களுக்கு முடிசூட்டுதல் மற்றும் அரசைப் பாதுகாக்கும் பணி இவர்களுடையது என கம்பராமாயணமும் குறிப்பிடுகின்றது.

கார்காத்தார் “பிள்ளை” என்ற பட்டப்பெயர் உடையவர்.  கார்காத்தார் மேற்கொண்டு ஒழுகிய திருமணச்சடங்கு, கருவுற்ற காலச்சடங்கு, குழந்தை பிறப்புச் சடங்கு, பருவ நிகழ்ச்சி சடங்கு மற்றும் பொதுவான சடங்குகள் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டையும், சிந்தனைத் திறனையும், அறிவியல் வளத்தையும் வெளிப்படுத்துகின்றன.

விளக்கேற்ற வேண்டிய திசைகளின் பலன்

கிழக்கு திசை : துன்பம் நீங்கும், கிரகபீடை விலகும்.

மேற்கு திசை : கடன் தொல்லை, சனி பீடை, கிரகதோஷம், பங்காளிகல் பகை நீங்கும்.

வடக்கு திசை : திருமணத் தடை, சுபகாரியத்தடை, கல்வித் தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.   திரவியம் கிட்டும், சர்வ மங்களங்கள் உண்டாகும்.

தெற்கு திசை : பெரும்பாவம், அபசகுணம்

குத்துவிளக்கில் ஒளியேற்றுவதற்கு உரிய பலன்கள்
ஒரு முகம்         -          மத்திம பலன்
இரு முகம்        -          குடும்ப ஒற்றுமை
மூன்று முகம்    -          புத்திர சுகம்
நான்கு முகம்    -          பசு, பூமி, செல்வம் கிட்டும்
ஐந்து முகம்      -          அனைத்து நலன்கள் கிட்டும்