வியாழன், 28 ஏப்ரல், 2011

விளக்கிடு கல்யாணம்


விளக்கிடு கல்யாணம் ஓர் சிறிய விளக்கம்

விளக்கிடு கல்யாணம் என்பது கார்காத்த வேளாளர் மரபில் 5 வயது கன்னிப் பெண்னிற்கு சிவசக்தி வடிவமான நவதாலியை தாய் வழிப் பாட்டனார் (தாய் மாமனார்) தைப் பொங்கல் முதல் நாளில் சூரிய பகவான் முன்பு கழுத்தில் அணிவிக்கப்படுகிறது.  நவதாலியின் அமைப்பானது சிவபெருமானின் அம்சமான பவழமணி பத்தும், நவசக்தியின் அம்சமான தங்க உருண்டைகள் ஒன்பதும் ஆக மொத்தம் 19 உருண்டைகள் சேர்த்து கோர்த்திருக்கும்.  9 நாயகிகளுக்கு 9 நாயகர்களும், 10வது பவளம் பிரதானமான ருத்திர மூர்த்தியான சிவபெருமானைக் குறிக்கும்.  19 மணிகளும் சிவசக்தி அருள் வடிவமாகும்.  5 வயது பெண் வளர்ந்து பெரியவள் ஆகி திருமண வயது வந்த காலத்தில் கணவனால் திருமாங்கல்யம் பூட்டும் வரை பெண்ணின் கற்புக்கு காவலாக, பாதுகாத்து, மந்திர தந்திரங்களாலோ (அ) வேறு தீயசெயல்களினாலோ தீங்கு ஏற்படாமல் பாதுகாத்து குலமகளாக விளங்க அம்மையும், அப்பனும் பெண்ணிற்கு அருள் கொடுத்து என்றும் காப்பார்கள் என்பது ஐதீகம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி.  5 வயது சிறுமியான பெண்ணிற்கு நல்லொழுக்கம், நற்பண்புகள், கல்வி, அறிவு, பொறுமை, தியாக உள்ளம், அன்பு நிறைந்த மனம், அடக்கம், தெய்வ வழிபாடு, பெரியோர்களை மதிக்கும் பாங்கு இவை யாவும் அமைய வேண்டும்.  அதை சிறுவயதிலேயே கடைபிடித்து வளர்ந்து வருவாளானால் இல்லத்துக்கு அரசியாக குடும்பத்தில் விளக்காக ஒளி வீசி என்றும் பிரகாசிக்க முடியும் என்பதற்காக விளக்கு பூஜையும் செய்வது என்பது வழக்கு.

அகல் விளக்கு சிவனின் வடிவமாகும்.  கைவிளக்கு சக்தி வடிவமாகும்.  108 இழைகள் எடுத்து அதை மூன்று பாகமாக பிரித்து ஜடை போலப் பின்னிப் போட்டு ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.  வீட்டிலுள்ள அஞ்ஞானம், பேதமை, வறுமை, நோய், மனசஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி அம்மையே எனக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று வழிபடவேண்டும்.  பெண் ஆனவள் கணவனுடன் இணைந்து சிவசக்தியின் அம்சமாக ஒவ்வொரு இல்லத்திலும் விளங்க வேண்டும்.  வாழ்வுக்கு அரசியாக வாழ வேண்டும்.  எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் மங்கையர்க்கு அரசியாக எம்பெருமான் அருளால் என்றென்றும் வாழ்வார்கள் என விளக்கிடு கல்யாணத்தின் பெருமை குறிப்பதாக வரலாறு.

கார்கார்த்த வேளாளர் பற்றிய ஒரு சிறு குறிப்பு

பழம்பெரும் தமிழ்க்குலமான கார்காத்தார் என்றும், காராளர் என்றும், காரைக்காட்டார் என்றும் வழங்கப்படும் கார்காத்த வேளாளரின் வரலாறு பாரம்பரியம் மிக்கது.

இவ்வின மக்கள் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, தென்னார்க்காடு, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பரவி வாழ்கின்றனர்.

கார்காத்த வேளாளர் “உழுவித்துண்போர்” “உழுதுண்போர்” என இருவகைப்படுவர்.  இவர்கள் “வேள்” என்றும் “அரசு” எனவும் உரிமை பெற்றனர்.  இவர்கள் தொழில் உழுது பயிரிடுதல்.  வேளாளர் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவர் என்னும் பொருளுடையது என்பர்.  துலாபாரதானத்தில் அரசர்களை நிறுக்கும் தொழில் இவர்களுடையது என மனுவும், அரசர்களுக்கு முடிசூட்டுதல் மற்றும் அரசைப் பாதுகாக்கும் பணி இவர்களுடையது என கம்பராமாயணமும் குறிப்பிடுகின்றது.

கார்காத்தார் “பிள்ளை” என்ற பட்டப்பெயர் உடையவர்.  கார்காத்தார் மேற்கொண்டு ஒழுகிய திருமணச்சடங்கு, கருவுற்ற காலச்சடங்கு, குழந்தை பிறப்புச் சடங்கு, பருவ நிகழ்ச்சி சடங்கு மற்றும் பொதுவான சடங்குகள் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டையும், சிந்தனைத் திறனையும், அறிவியல் வளத்தையும் வெளிப்படுத்துகின்றன.

விளக்கேற்ற வேண்டிய திசைகளின் பலன்

கிழக்கு திசை : துன்பம் நீங்கும், கிரகபீடை விலகும்.

மேற்கு திசை : கடன் தொல்லை, சனி பீடை, கிரகதோஷம், பங்காளிகல் பகை நீங்கும்.

வடக்கு திசை : திருமணத் தடை, சுபகாரியத்தடை, கல்வித் தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.   திரவியம் கிட்டும், சர்வ மங்களங்கள் உண்டாகும்.

தெற்கு திசை : பெரும்பாவம், அபசகுணம்

குத்துவிளக்கில் ஒளியேற்றுவதற்கு உரிய பலன்கள்
ஒரு முகம்         -          மத்திம பலன்
இரு முகம்        -          குடும்ப ஒற்றுமை
மூன்று முகம்    -          புத்திர சுகம்
நான்கு முகம்    -          பசு, பூமி, செல்வம் கிட்டும்
ஐந்து முகம்      -          அனைத்து நலன்கள் கிட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக